GuidePedia

வெளிநாட்டில் வேலைசெய்யும் இலங்கையர்களின் நலன் கருதி இந்த நல்லாட்சியில்  அரசு அவர்களுக்கான நலத்திட்டங்களை அறிவிக்க முன்வரவேண்டும். இலங்கைக்கு அந்நிய செலவாணியை ஈட்டித்தரும் நாட்டின் முள்ளந்தண்டாக செயற்படும் இலங்கைக்கு வெளியே பணி செய்துவரும் இவர்களின் துன்பங்கள் சொல்லிலடங்காதவை.

இந்த நல்லாட்சியை நிறுவுவதிலும் இவர்களது பங்கு அளப்பரியதாகவே இருந்தது என்பதை யாரும் மறுக்கவே அல்லது மறைக்கவோ முடியாது. தமது வாழ்நாளில் அதிகமான காலங்களை நாட்டுக்கு வெளியே கடத்திவரும் இவர்கள் நாட்டின் வளர்ச்சியை தூக்கி நிறுத்துவதில் எப்போதும் முன்னிற்பவர்கள்.

இவர்களின் சேவையை நாடு கொண்டாடாது விட்டாலும் அவர்களது உரிமைகளையும் கடமைகளையும் நிறைவேற்றி கொடுக்க முன்வரவேண்டும்.அரசாங்க சேவை செய்து ஓய்வு பெறும்போது அவர்களுக்கு ஓய்வுதியம் வழங்க முன்வந்த இலங்கை அரசியலமைப்பு இவர்களை மறந்தது கவலையளிக்க கூடியதே.

மீனவர்கள்,விவசாயிகளுக்கு கூட ஓய்வுதிய திட்டங்கள் சரியான முறையில் வகுக்கப்பட்டிருந்தும் கூட இந்த சகோதரர்களுக்கான ஓய்வுதிய திட்டங்கள் பற்றிய அறிவு கேள்விக்குறியாகவே உள்ளது? நல்லாட்சி அரசை அமைத்துவிட்டு ஏக்கத்துடன் நமக்கு நலவாக ஏதாவது நடக்காதா? என ஏக்கத்துடன் வாழும் இவர்களுக்கு இந்த அரசு கொடுக்கப்போகும் பதில் என்ன?

தூதரகங்கலின் உதவியுடன் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்க வேண்டும் எனும் கோரிக்கை வலுப்பெற்றிருக்கும் சூழ்நிலையிலும் கூட அரசு மௌனம் காத்துவருவது வேதனையான ஒன்றே.பல அதிரடி முடிவுகளை பதவியேற்ற நாள் முதல் அறிவித்துக் கொண்டுவரும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் கௌரவ தலதா அதுகொறல்ல அவர்களும்,நாட்டினை பொருளாதாரத்தை உயர்த்த பாடுபடும் நிதியமைச்சர்  கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களும்,நல்லாட்சியின் தலைவர்களான கௌரவ பிரதமர் ரணில் , கௌரவ ஜனாதிபதி மைத்திரி அவர்களும் இதனை கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கையை வெகு விரைவில் எடுக்குமாறு சகல இலங்கைக்கு வெளியே வாழும் வெளிநாட்டு தொழிலாளிகள் சார்பிலும் வேண்டுகோள் விடுகிறேன்.

அத்துடன் எதிர்வரும் 2016ம் ஆண்டின் வரவுசெலவு திட்டத்தில் இவர்களுக்கான ஆக்க பூர்வ திட்டத்தை அறிவிக்க அரசு முன்வர வேண்டும் என்பதுடன் இவர்களின் ஆதரவுடன் பாராளுமன்ற கதிரைகளை கைப்பற்றியிருக்கும் பா.உ களும் இந்த விடயத்தை கையில் எடுத்து போராட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கிறேன் என தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியின் தேசிய கொள்கைபரப்பு செயலாளரும்,அல்- மீஸான் பௌண்டசன் தலைவருமான அல் -ஹாஜ் ஹுதா உமர் தனது ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

அத்துடன் இதுசம்பந்தமான மகஜர் அண்மையில் பிரதமர்,முக்கிய அமைச்சர்கள், கட்சித்தலைவர்கள், எம்,பிக்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது  

-கலைமகன்-






 
Top