GuidePedia


குற்ற வழக்குகளில் எம்.பி.க்கள். எம்.எல்.ஏ.க்கள் குற்றவாளிகள் என தீர்ப்பு அளிக்கப்பட்டாலும், அவர்கள் அந்த தீர்ப்புகளுக்கு எதிராக மேல்-முறையீடு செய்து, அதன்தீர்ப்பு வரும்வரை பதவி வகிக்க முடியும் என்று மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 8-ன் உட்பிரிவு 4 சலுகை வழங்கி வந்தது.

ஆனால் இந்த சட்டப்பிரிவு செல்லாது என சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2013-ம் ஆண்டு, ஜூலை 10-ந்தேதி தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு, குற்றப்பின்னணி கொண்ட அரசியல்வாதிகளின் தலையில் இடியாக இறங்கியது.

இந்த தீர்ப்பை செல்லாததாக ஆக்குகிற வகையில், அப்போதைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு பாராளுமன்றத்தில் மசோதா ஒன்றை கொண்டு வந்தது. ஆனால் எதிர்க்கட்சிகளின் ஆதரவை பெற முடியாமல் போனதால், அந்த மசோதாவை நிறைவேற்ற இயலாமல் போய் விட்டது.

ஆனால் அவசர சட்டம் ஒன்றை கொண்டு வர காங்கிரஸ் கூட்டணி அரசு முடிவு செய்து, அதற்கு மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. ஆனால் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, அந்த முடிவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதால், அவசர சட்ட முடிவு கை விடப்பட்டது.

அந்த நிலையில், ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட டெல்லி மேல்-சபை காங்கிரஸ் எம்.பி., ரஷீத் மசூத்தின் பதவி, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்கீழ் முதன் முதலாக (2013, அக்டோபர் 21-ந்தேதி) பறிக்கப்பட்டது.

தொடர்ந்து மாட்டுத்தீவன ஊழல் வழக்கில், ராஷ்ட்ரீய ஜனதாதளம் தலைவர் லாலு பிரசாத், ஐக்கிய ஜனதாதளம் எம்.பி., ஜெகதீஷ் சர்மா ஆகியோரின் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகள் 2013-ம் ஆண்டு, அக்டோபர் 22-ந்தேதி பறிக்கப்பட்டன.

ஆனால் குற்ற வழக்குகளில் மக்கள் பிரதிநிதிகள் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டாலும், இது தொடர்பாக பாராளுமன்றமும் சரி, சட்டசபைகளும் சரி பதவி பறிப்பு நடவடிக்கை எடுப்பதில் தாமதம் ஏற்படுகிறது. இந்த தாமதம் கூடாது என தேர்தல் கமிஷன் கருதுகிறது.

இதுதொடர்பாக பாராளுமன்ற மக்களவை, மேல்-சபை, மாநில சட்டசபை, சட்ட மேல்-சபை செயலகங்களுக்கு தேர்தல் கமிஷன் சில அறிவுறுத்தல்களை கூறி உள்ளது. அது வருமாறு:-

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு, இந்த நாட்டின் சட்டம் ஆகும். ஊழல் வழக்குகள் உள்ளிட்ட குற்ற வழக்குகளில் எம்.பி.க்கள்., எம்.எல்.ஏ.க்கள் குற்றவாளிகள் என தீர்ப்பு அளிக்கப்படுகிறபோது அது அவர்களது உடனடி பதவி பறிப்புக்கு வழி வகுக்கிறது. ஆனால், இதுதொடர்பான அறிவிக்கையை பாராளுமன்றமும், சம்பந்தப்பட்ட சட்டசபைகளும் வெளியிடுவதில் தாமதம் ஏற்படுகிறது.

இதன்காரணமாக அந்த எம்.பி., எம்.எல்.ஏ. தொடர்ந்து பதவி வகிக்க நேருகிறது. இது அரசியல் சாசனம் பிரிவு 103 மற்றும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மீறும் செயலாகும். குற்ற வழக்குகளில் தீர்ப்பு வந்த உடனேயே எந்தவித பாகுபாடுமின்றி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்த வேண்டும்.

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் குற்றவாளிகள் என தீர்ப்பு அளித்து, தண்டிக்கப்பட்டிருப்பது பற்றி உடனடியாக பாராளுமன்ற மக்களவை, மேல்-சபை, சட்டசபை, சட்ட மேல்சபை செயலகங்களுக்கு தகவல் தெரிவிப்பதை மாநில அரசுகளின் தலைமை செயலாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.

தீர்ப்புக்கும், பதவி பறிப்பு அறிவிக்கைக்கும் இடையே 7 நாட்கள்தான் இடைவெளி இருக்க வேண்டும். (அதாவது தீர்ப்பு வந்த ஒரு வாரத்தில் பதவி பறிப்பு குறித்த அறிவிக்கை வெளியிடப்பட வேண்டும்).

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



 
Top