GuidePedia

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாரின் ஆட்சிக்காலத்தில் ஹெலிக்கெப்டர் மூலம் பயணம் செய்த போது கேகாலை ஹரணாயகாவில் வைத்து விபத்துக்குள்ளானதாகக் கூறப்படும் முன்னாள் முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும் , அமைச்சருமான மர்ஹும் M.H.M.அஷ்ரப் அவர்களின் விமான விபத்து தொடர்பான விசாரணையையும் துரிதப்படுத்தி குற்றவாளிகளை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்த இந்த தேசிய அரசாங்கம் முன்வர வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் (UPA) யின் தலைவருமான சட்டத்தரணி ஹுனைஸ் பாறூக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.... 
கடந்த கால ஆட்சியின் போது நடைபெற்ற படுகொலைகள், மோசடிகள் குற்றங்கள் அனைத்தும் நல்லாட்சி என்று சொல்லப்படுகின்ற ஆட்சியில் விசாரிக்கப்பட வேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பாகும். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.
அந்த அடிப்படையில் இலங்கை முஸ்லிம்களின் குரலாகவும் முஸ்லிம்களின் அரசியல் முகவரியாகவும் இருந்து முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சியை உருவாக்கி அனைத்து முஸ்லிம்களையும் ஒன்று திரட்டி சரியான அரசியல் பாதைகளை வகுத்து வழிகாட்டிய அவரின் விபத்து முஸ்லிம்களின் மத்தியில் இன்றுவரை கேள்விக்குறியாகவே இருந்து வருகின்றது. 
நல்லாட்சி என்று சொல்லுகின்ற தேசிய அரசாங்கத்தில் முஸ்லிம்களின் தேசியத் தலைவரான மர்ஹும் M.H.M.அஷ்ரப்பின் விபத்து தொடர்பாகவும் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். மர்ஹும் அஷ்ரப் அவர்களின் புகைப்படத்தை வைத்துக்கொண்டு அரசியல் ஆதாயம் தேடுபவர்கள் அவரைவைத்து வெற்றி பெற்றதும் அமைச்சர்கள் ஆனதும் வாய்மூடி மௌனிகளாகுறார்கள். இதுவரைக்கும் யாரும் அஷ்ரப் அவர்களின் மரணம் தொடர்பாக பேசி குற்றவாளிகளை இணங்கான முடியாமை மௌனம் சாதிப்பதுதான் புரியாமல் இருக்கின்றது.

இவர்கள் அமைச்சுப் பதவிகளை பெறுவதற்காக வேண்டி காட்டுகின்ற அக்கறையை தங்களை வளர்த்த அந்த தலைவனின் மரணம் தொடர்பாக பேசாமல் இருப்பதுதான் இவர்களின் வங்குரோத்து அரசியலை எடுத்துக்காட்டுகின்றது. 
ஆகவே இனியும் இத் தலைவர்களை நம்பிக்கொண்டு நாம் பொறுமை காக்க முடியாது. அனைவரும் ஒன்றுபட்டு இவ்வரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதனூடாக மறைந்த தலைவரின் விபத்து தொடர்பான உண்மைத்தன்மையை கண்டறிந்து குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு அனைவரும் ஒன்றுபட வேண்டும்.


தகவல்- றிப்கான் கே. சமான்



 
Top