GuidePedia

(ரூஸி சனூன்  புத்தளம்)
40 வருட காலங்கள் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்காக கஷ்டப்பட்ட எமக்கு அக்கட்சி   செய்த துரோகத்தின் காரணாமாக இன்று அக்கட்சி சின்னா பின்னமாகியுள்ளதோடு புத்தளம் மாவட்டத்தில் அக்கட்சியினால் தகுதியான ஒரு வேட்பாளரை கூட நிறுத்த முடியாமல் போயுள்ளதாக புத்தளம்  மாவட்ட த்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக ஐ.தே. கட்சியில் இணைந்து போட்டியிடும் வேட்பாளரும் ,முன்னாள் மாகாண  அமைச்சருமான எம்.எச்.எம். நவவி தெரிவித்தார்.
புத்தளம் மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அமைப்பாளர் ஏ.ஆர்.எம். அலிசப்ரியின் காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (26) காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த  செய்தியாளர் மாநாட்டில் புத்தளம் மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அமைப்பாளர் ஏ.ஆர்.எம். அலிசப்ரி,  யாழ் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஐ.எம். இல்யாஸ், முன்னாள் அமைச்சர் ஹுசைன் பைலா ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
நவவி அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், புத்தளம் மாவட்டத்தில் எதிர்வரும் தேர்தலில் எமக்கு எந்த போட்டிகளும் இல்லை. கடந்த காலத்தில் புத்தளம் நகரில் முஸ்லிம் வேட்பாளர்கள் பல கட்சிகளில் பிரிந்து நின்று போட்டியிட்டதாலேயே நாம் எமது வாக்குகளை பிரித்து நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை இல்லாமல் ஆக்கியுள்ளோம். ஆனால் இம்முறை மூன்று முஸ்லிம் வேட்பாளர்களும் ஒரே கட்சியில் போட்டியிடுவதால் அந்த  இழந்து நின்ற நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை இம்முறை நிச்சயம் அடைந்து கொள்ள முடியும்.
புத்தளம் மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அமைப்பாளர் ஏ.ஆர்.எம். அலிசப்ரி கருத்து தெரிவிக்கையில், 26 வருடங்கள் நாம் இழந்து நின்ற நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை இம்முறை தேர்தல் மூலம் நாம் அடைந்து கொள்ளும் சந்தர்ப்பந்ததை அடைய உள்ளோம். இது தவிர எமது தலைவர் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் சுழற்சி முறையில் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை தருவதாக எமக்கு உறுதியளித்துள்ளார். இம்முறை போட்டி இல்லாமல் எமது வெற்றி உறுதியாகியுள்ளதால் சுயேட்சையில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு இப்போதே எம்மோடு இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றோம்.
அமைச்சர் ரிஷாத் பதியுதீன் புத்தளம் மாவட்டத்துக்கு அதிகமதிகம் சேவைகளை இன்றும் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார். இவைகளை சகித்து கொள்ள முடியாவதர்களே பிரதேச வாதத்தை பரப்பிக்கொடிருக்கிறனர். அப்படியானவர்கள் ஐ.தே. கட்சியை தோற்கடிக்கவே இன்று களம் இறங்கியுள்ளனர். அவர்களின் கனவு பலிக்கப்போவதில்லை. நாம் இம்முறை தேர்தலில் போட்டிகள் இன்றி வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது எனக்கூறினார்.
நன்றி - புத்தளம் ஒன்லைன்



 
Top