GuidePedia

குருணாகல் மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர் மஹிந்த ராஜபக்சவிடம் பொலிஸார் விசாரணை நடத்தக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ராடா நிறுவன ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்தப்படலாம் என பொலிஸ் உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் ராடா நிறுவனத்தின் தலைவராக கடமையாற்றியிருந்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் துறைசார் விடயங்களில் ஒன்றாக இந்த நிறுவனம் காணப்பட்டது.
2004ம் ஆண்டு டிசம்பரில் இடம்பெற்ற ஆழிப் பேரலை அனர்த்தம் காரணமாக வீடுகள் மற்றும் சொத்துக்கள் இழந்தவர்களுக்கு நிவாரணங்களை வழங்குவதே ராடா நிறுவனத்தின் பிரதான நோக்கமாக காணப்பட்டது.
இந்த நிறுவனத்தின் நிதி மோசடி செய்யப்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நிதி மோசடி தொடர்பில் நிறுவனத்தின் பிரதம கட்டுப்பாட்டு அதிகாரி சாலிய விக்ரமசூரிய பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்டிருந்தார்.
டிரான் அலஸ் ராடா நிறுவனத்தின் தலைவராக கடமையாற்றிய காலத்தில், சாலிய விக்ரமசூரிய 169 மில்லியன் ரூபா பணத்தை மோசடி செய்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட் விக்ரமசூரிய 50,000 ரூபா ரொக்கம் மற்றும் ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான இரண்ட சரீரப் பிணைகளின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார்.
தம்மை கைது செய்வதனை தடுக்கும் நோக்கில் டிரான் அலஸ் உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராபஜக்சவின் உத்தரவிற்கு அமைய திறைசேரியினால் ராடா நிறுவனத்திற்கு 1959 மில்லியன் ரூபா வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ராடா நிறுவனம் இயங்கி வந்த காலத்தில் அந்த நிறுவனம் 2431 மில்லியன் ரூபா செலவிட்டுள்ளது.
திருகோணமலை மற்றும் மட்டக்களப்பில் வீடுகளை அமைப்பதாக 169 மில்லியன் ரூபா பணம் பெற்றுக்கொள்ளப்பட்ட போதிலும் ஒரு வீடு கூட நிர்மானிக்கப்படவில்லை.
இந்தக் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது.
மஹிந்தவிடம் விசாரணை நடத்தாது, சம்பவம் பற்றிய விசாரணைகளை தொடர்ச்சியாக முன்னெடுக்க முடியாது என உயர் பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் மஹிந்தவிடம் விசாரணை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



 
Top