(க.கிஷாந்தன்)
நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் களமிறங்கியுள்ள எஸ். சதாசிவம் காட்சிப்படுத்தியுள்ள சுவரொட்டிகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
சதாசிவத்தால் காட்சிப்படுத்தப்பட்ட சுவரொட்டிகளில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் முத்துசிவலிங்கம், பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் மற்றும் அவரது புகைப்படம், விருப்பு இலக்கங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
எனினும் காங்கிரஸ் கட்சி காட்சிப்படுத்தியுள்ள சுவரொட்டிகளில் ஆறுமுகன் தொண்டமான், முத்துசிவலிங்கம் மற்றும் அனுஷியா சிவராஜா ஆகியோரின் புகைப்படங்களும் விருப்பு இலக்கங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இதுவொரு சட்டவிரோத செயலெனவும் தங்களது கட்சியின் உறுப்பினரின் புகைப்படத்தை நீக்கிவிட்டு தனது புகைப்படத்தை இணைத்து வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்கு சதாசிவம் முயற்சிப்பதாகவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் முத்துசிவலிங்கம் தெரிவித்துள்ளார்.
மேலும், இதுதொடர்பில் அட்டன் பொலிஸ் நிலையத்திலும் தேர்தல்கள் ஆணையாளரிடமும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.