(க.கிஷாந்தன்)
நோர்வூட் கிளங்கன் தோட்ட மக்களும், நோர்வூட் பொலிஸாருக்கும் இடையில் 27.0.72015 அன்று ஏற்பட்ட முறுகல் நிலை சமநிலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
காசல்ரீ நீர்த் தேக்கத்திற்கு அண்மித்த பகுதியிலுள்ள நோர்வூட் தோட்டத்திற்கு உரியதென கருதப்படும் 38 ஏக்கர் காணி பகுதியை வெளி நபர்களுக்கு கிராம சேவகரால் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்து நோர்வூட் கிளங்கன் தோட்ட மக்களுக்கும், நோர்வூட் பொலிஸாருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.
நோர்வூட் தோட்டத்திற்குச் சொந்தமான கிளங்கன் பகுதியின் ஒரு பகுதி எனக் கருதப்படும் இந்த நிலப்பரப்பில் கடந்த 25 வருடங்களுக்கு முன்னர் தேயிலை பயிற்செய்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த பிரதேச கிராம சேவகரின் வேண்டுகோளின்பேரில் நில அளவை மற்றும் சீர்த்திருத்தும் திணைக்களத்தின் அனுமதியின் கீழ் வேறு பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் இங்கு குடிபெயரயிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 100 வருடங்களுக்கும் மேலாக வசதிகளின்றி லயன் அறைகளில் வசித்துவரும் தங்களுக்கு இந்த காணியில் குடிபெயர அனுமதி வழங்காது, வேறு தரப்பினருக்கு அனுமதி வழங்கியிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாதென நோர்வூட் கிளங்கன் தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த முறுகல் நிலை தொடர்பாக தகவலறிந்த நோர்வூட் பொலிஸார், குறித்த பகுதிக்கு விரைந்ததோடு, இது குறித்து பொலிஸார் அம்பகமுவ பிரதேச செயலாளர் எச்.எம்.சீ. ஹேரத்திற்கும் தகவல் அளித்துள்ளனர்.
எவ்வாறாயினும் அட்டன் – சமனலகம பிரதேசத்தில் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட 4 குடும்பங்களுக்கு தலா 7 பேர்ச் வீதம் குறித்த பகுதியில் குடியமர அனுமதிக்குமாறு கோரி பிரதேச கிராம சேவகரினால் விடுக்கப்பட்ட கோரிக்கையின் படி நில அளவை மற்றும் சீர்த்திருத்தும் திணைக்களத்தினால் அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக அம்பகமுவ பிரதேச செயலாளர் விளக்கமளித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் தோட்ட மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் காணி வழங்கும் நடவடிக்கையை பொதுத் தேர்தல் முடியும்வரை பிற்போடுமாறும் அம்பகமுவ பிரதேச செயலாளர் பணிப்புரை விடுத்திருப்பதாக பொலிஸார் நோர்வூட் கிளங்கன் தோட்ட மக்களுக்கு கூறினர்.
இதேவேளை, தங்களது அதிகாரத்திற்குட்பட்ட தோட்டக் காணிகளை வேறு தரப்பினருக்கு வழங்குவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாதென தெரிவித்துள்ள நோர்வூட் தோட்ட உதவி முகாமையாளர், அவ்வாறு வழங்கப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
குறித்த கிராம சேவகர் ஒருசில வரப்பிரசாதங்களைப் பெற்று தங்களுக்குரிய நிலங்களை வேறு தரப்பினருக்கு வழங்குவதை அனுமதிக்க முடியாதென தோட்ட மக்கள் குறிப்பிடுகின்றனர்..
தங்களுக்கு உரிய பகுதியை வழங்கிய பின்னர் எஞ்சிய பகுதியை வேறுதரப்பினருக்கு வழங்கினால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்போவதில்லை என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.