இலங்கையின் தேசியப் பிரச்சினைக்கு 13ஆவது திருத்தத்துக்குள்- மாகாணசபைகள், உள்ளூராட்சி சபைகளுக்கு அதிகாரங்களை வழங்கும், அரசியல் தீர்வு ஒன்று, ஆட்சியமைத்து ஆறுமாதங்களுக்குள் முன்வைக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நேற்று வெளியிட்ட, நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையிலேயே, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சகல மக்களினதும் நியாயத்தையும் சமத்துவத்தையும் உறுதி செய்வதற்காக, பரந்த அதிகாரங்கள் மற்றும் மாவட்ட ரீதியிலான பொறிமுறை ஒன்றுடன் கூடிய தேசிய நல்லிணக்க ஆணைக்குழு ஒன்றை உருவாக்கவுள்ளதாகவும், நாடாளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றி புதிய அரசியலமைப்பு ஆறு மாதங்களுக்குள் உருவாக்கப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘அனைவரும் சுதந்திரமாக வாழும் பாதுகாப்பான சூழலை உருவாக்கும் வகையில் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்.
எல்லா இனத்தவர்களுக்கும் நியாயம் கிடைக்கும் வகையில் அரச கட்டமைப்பு உருவாக்கி ஆள்புல ஒருமைப்பாடு, இறைமை என்பனவற்றை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பிரிவினைவாதம், அனைத்துலக தலையீடு என்பன தலைதூக்க இடமளிக்கப்படாது.
பெரும்பான்மை சிங்கள மக்கள் வாழும் இன, மத பல்லினத்தன்மையுடன் கூடிய நாடாக அன்றும் ஏற்றோம், நாளையும் ஏற்போம்.
பெரும்பான்மை சிங்கள மக்கள் வாழும் இன, மத பல்லினத்தன்மையுடன் கூடிய நாடாக அன்றும் ஏற்றோம், நாளையும் ஏற்போம்.
மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களை மேலும் பலப்படுத்தும் அரசியல் தீர்வு குறித்து, நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்கள், அரசியல் கட்சிகள் அடங்கலான அனைத்து தரப்பினருடனும், புதிய அரசாங்கம் அமைக்கப்பட்ட ஒரு மாத காலத்தினுள் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்படும்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் ஒருமாத காலத்தினுள் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இனப்பிரச்சினைக்கான தீர்வாக, 13ஆவது திருத்தச்சட்டத்தின் கீழ் மாகாணசபைகளுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படும் என்று இந்த தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எனினும், 13ஆவது திருத்தச்சட்டத்துக்கு அப்பால் சென்று பிரச்சினைக்குத் தீர்வு காண்பதாக, மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த போது, இந்தியாவுக்கு வாக்குறுதி அளித்திருந்தார்.
அந்த நிலைப்பாட்டில் இருந்து அவர் தற்போது பின்வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.