(க.கிஷாந்தன்)
தலவாக்கலையிலிருந்து நாவலப்பிட்டி வரை சென்ற லொறி ஒன்றுடன் தலவாக்கலை மட்டுக்கலை பகுதியிலிருந்து பத்தனை பொலிஸ் நிலையம் வரை சென்ற மோட்டர் சைக்கிள் ஒன்று தலவாக்கலை நாவலப்பிட்டி பிரதான வீதியில் பத்தனை சந்தியில் வைத்து லொறியின் சில்லுக்குள் சிக்கி விபத்துக்குள்ளாகியதில் மோட்டர் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் படுங்காயங்களுக்குள்ளாகி கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து 30.07.2015 அன்று பிற்பகல் 1 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பத்தனை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த லொறியை, அதிக வேகமாக சென்ற மோட்டர் சைக்கிள் முந்தி செல்ல முற்பட்ட போது வேகத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாகவே லொறியின் மீது மோதி அதன் பின் லொறியின் சில்லுக்குள் சிக்கி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பத்தனை பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.
படுங்காயம்பட்ட இரு இளைஞர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதனால் அவர்களை நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்ற நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.