GuidePedia

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா மேடையேறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சந்திரிக்கா குமாரதுங்கவை ரணிலுக்கு ஆதரவாக மேடையேற வைப்பதில் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமவீர தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளார்.
அவரது கோரிக்கையை ஏற்றுக் கொண்டுள்ள சந்திரிக்கா குமாரதுங்க, இன்னும் இரண்டு வாரங்களில் நாடுதிரும்பவுள்ளார்.
அதன் பின் ரணிலின் பிரச்சாரக்கூட்டமொன்றில் கலந்துகொண்டு அவருக்கு ஆதரவாக உரை நிகழ்த்தவுள்ளார்.
ரணிலுக்கு ஆதரவாக சந்திரிக்கா மேடையேறும் போது அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் பலரும் சந்திரிக்காவுடன் இணைந்து ரணிலுக்கு ஆதரவளிக்க முன்வரவுள்ளதாகவும் நம்பகமான தகவல் வட்டாரங்களில் இருந்து தெரிய வந்துள்ளது.
தற்போதைய நிலையில் அரசாங்க தரப்பில் இருந்து 29 பேர் எதிர்க்கட்சியுடன் இணைந்து கொள்வதற்கான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதற்கிடையே சந்திரிக்கா குமாரதுங்கவின் வருகை குறித்து அரசாங்கத்தரப்பு உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கின்றது.
அவர் ரணிலுக்கு ஆதரவளிக்க தீர்மானித்தால், சந்திரிக்காவையும் புலிகளுடன் தொடர்புபடுத்தி செய்திகளை பரப்புவதற்கு ஆளும் தரப்பின் ஊடக முக்கியஸ்தர்கள் தயாராக உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் சந்திரிக்கா அரசாங்கத்தில் நடைபெற்ற ஊழல்கள், மோசடிகள் தொடர்பான விபரங்களையும் எதிர்வரும் காலங்களில் ஊடகங்கள் வாயிலாக கசிய விடுவதற்கு அரசுத்தரப்பு தீர்மானித்துள்ளது.



 
Top