GuidePedia


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு சட்டரீதியான தகுதி இல்லை என்று பிரபல சட்டநிபுணர்கள் முன்வைத்துள்ள கருத்தினை தேர்தல்கள் ஆணையாளரிடம் சமர்ப்பிக்கவுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கூறுகின்றது. 

மஹிந்த ராஜபக்ஷ இரண்டாவது தடவை ஆட்சிக்கு வந்த பின்னர் 18ம் திருத்தம் நிறைவேற்றப்பட்டது. 

அவுஸ்திரேலிய சட்டநிபுணர் ஒருவருடன் இலங்கையின் சட்டநிபுணர்கள் கொழும்பில் நேற்று சனிக்கிழமை மாலை நடத்திய கலந்தாய்விலேயே இந்தக்கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. 

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் அடுத்த ஆண்டின் முற்பகுதியிலோ அல்லது இந்த ஆண்டின் இறுதிக்குள்ளோ நடத்தப்படக்கூடும் என்ற ஊகங்கள் அரசாங்கத்தின் அண்மைக்கால நடவடிக்கைகள் மூலம் வெளிப்பட்டுவருகின்றன. 

தனது இரண்டாம் தவணைப் பதவிக்காலம் முடியும் முன்னமே, முன்கூட்டியே அடுத்த ஜனாதிபதித் தேர்தலை மஹிந்த ராஜபக்ஷ நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் பரபரப்புடன் நடந்துவருவதாக ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன. 

இதற்கிடையில், அரசியலமைப்புச் சட்டப்படி மகிந்த ராஜபக்ஷ மூன்றாவது தவணைக்கும் போட்டியிட முடியாது என்கின்ற சர்ச்சையை நாட்டின் சட்ட வல்லுநர்கள் எழுப்பிவருகின்றனர். 

ஆனால், அரசியலமைப்புக்கு மஹிந்த அரசாங்கம் கொண்டுவந்த 18-ம் திருத்தத்தின் மூலம் அந்தத் தடை நீக்கப்பட்டுவிட்டது என்று அரசாங்க தரப்பினர் கூறிவருகின்றனர். 

ஆனால், மஹிந்த ராஜபக்ஷ இரண்டாம் தடவை பதவிப்பிரமாணம் செய்துகொண்ட சந்தர்ப்பத்திலேயே மூன்றாம் தடவையும் போட்டியிடுவதற்கான தகுதியை இழந்துவிட்டார் என்று அவருக்கு முதல் தடவை பதவிப்பிரமாணம் செய்துவைத்த முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா அண்மையில் கூறியிருந்தார். 

இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட, அவுஸ்திரேலிய சட்டவல்லுநரும் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான சூரி ரத்னபாலவை அழைத்திருந்த இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், இந்த சட்ட ரீதியான குழப்பத்துக்கு விளக்கம் அளிக்குமாறு கேட்டிருக்கின்றது. 

இந்தக் கலந்தாய்வில் இலங்கையின் முக்கிய சட்டத்துறை, அரசியலமைப்பு நிபுணர்கள் பலரும் இன்று கலந்துகொண்டிருந்தனர். 

´(எத்தனை தடவைகள் வேண்டுமானாலும் ஒருவர் ஜனாதிபதி பதவி வகிக்கக்கூடியவாறு கொண்டுவரப்பட்ட) அரசியலமைப்பின் 18-ம் திருத்தம் கடந்த காலத்துக்கு பின்நோக்கி ஆளும் தன்மை கொண்டது அல்ல என்று பேராசிரியர் சூரி ரத்னபால சுட்டிக்காட்டினார்´ என்றார். 

´இலங்கையின் பொருள்விளக்கச் சட்டத்தின் பிரகாரமும் அரசியலமைப்புடன் தொடர்புடைய சட்டங்களை பின்நோக்கி, கடந்த காலத்தையும் ஆளும் விதத்தில் கொண்டுவர முடியாது என்றும் பேராசிரியர் விளக்கமளித்தார்´ என்றும் கூறினார் உபுல் ஜயசூரிய. 

பேராசிரியர் ஜயம்பதி விக்ரமரத்ன, பேராதனைப் பல்கலைக்கழக சட்டத்துறையின் தலைவி டாக்டர் தீபிகா உடகம, பேராசிரியர் சாவித்திரி குணசேகர, திறந்த பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை தலைவர் டாக்டர் காமினா குணரத்ன உள்ளிட்ட இலங்கையின் சட்டநிபுணர்களும் அவுஸ்திரேலிய சட்டநிபுணர் சூரி ரத்நாயக்கவின் சட்ட விளக்கத்தையே இந்த கலந்தாய்வில் ஆமோதித்துள்ளனர். 

அதிகபட்சம் 12 ஆண்டுகளுக்கு ஜனாதிபதியாக ஆட்சியில் இருப்பதற்கு மட்டுமே மஹிந்த ராஜபக்ஷவுக்கு மக்கள் ஆணை வழங்கியிருக்கிறார்கள் என்பது தான் பிரபல சட்டநிபுணர்களின் கருத்து. 

இந்தக் கலந்தாய்வில் மஹிந்த ராஜபக்ஷ மூன்றாவது தடவையும் போட்டியிட முடியும் என்பதற்கான விளக்கங்களை எந்தவொரு சட்டநிபுணரும் தெளிவாக முன்வைக்கவில்லை என்றும் உபுல் ஜயசூரிய பிபிசியிடம் கூறினார். 

அடுத்த ஜனாதிபதி தேர்தல் விரைவில் நடத்தப்பட இருக்கின்றதா, அதில் மஹிந்த ராஜபக்ஷ போட்டியிடுவதற்கான சட்டரீதியான வாய்ப்புகள் உருவாகுமா என்பது இலங்கை அரசாங்கத் தரப்பின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளைப் பொறுத்தே அமையப் போகின்றது. 



 
Top