GuidePedia

ஜனாதிபதி தேர்தல் மற்றும் பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியுடன் கலந்துரையதாக உள்ளக தகவல்கள் கூறுகின்றன.
சிங்கள பௌத்த தேசியவாத அமைப்புகள் மற்றும் பௌத்த தேரர்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வது, அரசாங்கத்துக்குள் முரண்பட்டுள்ள பங்காளிக் கட்சிகள் அமைச்சர்கள் ஆகியோருடன் உரையாடி தொடர்ச்சியான ஆதரவுகளை பெறுவது தொடர்பாக பேசப்பட்டதாக கூறப்படுகின்றது.
அதேவேளை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் புலிகள் மீது விதித்த தடையை நீக்கியமை தொடர்பாகவும் அதற்கு எதிராக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இந்த சந்திப்பில் பேசப்பட்டதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சந்திப்பு நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றதாக கொழும்புத் தகவல்கள் கூறுகின்றன. இதேவேளை ஜாதிக ஹெல உறுமய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் தற்போது முரண்பட்டுள்ள நிலையில் அமைச்சர் விமல் வீரவன்ச மூலமாக இணக்கப்பாட்டை ஏற்படுத்த மூத்த அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா முற்படுவதாகவும் உள்ளக தகவல்கள் கூறுகின்றன.
அமைச்சர் மைத்திபால சிறிசேன ஹெல உறுமயவின் பாராளுமன்றக் குழுத் தலைவர் அத்துரலியே ரத்ன தேரரை நேற்று வெள்ளிக்கிழமை இரவு சந்தித்ததாகவும் மற்றுமொரு தகவல் தெரிவிக்கின்றது. மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட அனுமதிக்கமாட்டோம் என அத்துரலியே ரத்தன தேரர் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் பகிரங்கமாக பேசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.



 
Top