GuidePedia

சம்மாந்துறை பிரதேசத்திற்கு உட்பட்ட, சம்மாந்துறையில் இருந்து சுமார் 12 கிலோமீற்றர் தொலைவில் உள்ள அழகிய விவசாயக் கிராமம்தான் மஜீட்புர குடியேற்றக் கிராமமாகும்.
இக்கிராமம் சம்மாந்துறைக்கு உட்பட்ட கிராமமாக இருந்தாலும் இது சம்மாந்துறை மக்களால் வேற்றுாராகவே இன்றும் பார்க்கப்பட்டு வருகின்றது. இக்கிராமத்தின் அத்தனை அரசாங்க அலுவல்களுக்கும் சம்மாந்துறையே பொறுப்பாக இருக்கின்றது.
வங்கியாக இருந்தாலும் சரி, பிரதேச சபையாக இருந்தாலும் சரி, பிரதேச செயலகமாக இருந்தாலும் சரி அத்தனை அரசாங்க அலுவல்களுக்கும் இப்பிரதேச மக்கள் சம்மாந்துறைக்கே செல்ல வேண்டும். இப்படி சம்மாந்துறைக்கு உட்பட்டு இருக்கும் இந்தக் கிராமம் சம்மாந்துறையில் இருந்து ஓரங்கட்டப்பட்டு சம்மாந்துறை மக்களால் ஒரு வேற்றுாராகவே நோக்கப்படுகின்றது.
இக்கிராமத்துக்கு பல்வேறு தேவைப்பாடுகள் இருக்கின்றது அதில் முக்கியமான ஒரு தேவைப்பாடுதான் கல்வி. இங்கு கல்வியானது பாரிய வீழ்ச்சி கண்டிருக்கின்றது இதற்குக் காரணம் கல்விக்கான சரியான தெளிவுருத்தல்களும், அதற்காகன வசதி வாய்ப்புக்களும் ஏற்படுத்திக் கொடுக்கப்படாமையே ஆகும்.
இங்கிருக்கின்ற மாணவர்களும் மாணவிகளும் தங்களது அதி கூடிய உயர் படிப்பாக க.போ.த சாதாரணதரத்தையே கற்கின்றார்கள், அவர்களுக்கு மேற்கொண்டு படிக்க எண்ணம் இருந்தாலும் அதற்கான வசதி வாய்ப்புக்கள் இன்னும் சமாந்துறை வலயக்கல்வி அலுவலகத்தினால் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை.
இக்கிராமத்தில் உள்ள பாடசாலையான மஜீட்புர வித்தியாலயமானது கிட்டத்தட்ட 1966 ஆம் ஆண்டிலிருந்து இயங்கிக் கொண்டிருக்கின்றது என்பது இங்கு குறிப்பிடத் தக்கது.
அண்மையில் சம்மாந்துறை பிரதேச கல்வி அபிவிருத்தி தொடர்பான கல்வி அபிவிருத்திக் குழுக் கூட்டம் கடந்த (05) திகதி சம்மாந்துறை பெரிய பள்ளிவாசல் இஸ்லாமிய செயலக கட்டிட கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் பல பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள்.
இவர்கள் ஏன் மஜீட்புர கிராமத்தின் கல்வி அபிவிருத்தியிலும் கவனம் செலுத்தக் கூடாது...??? மஜீட்புரமும் சம்மாந்துறையில் உள்ள கிராமம்தானே அது ஒன்றும் வேற்றுார் இல்லையே...!!! இக்கிராமத்தில் உள்ள மஜீட்புர பாடசாலையில் உள்ள ஒரு சில குறைகளை இங்கு நான் சுட்டிக் காட்ட கடமைப்பட்டுள்ளேன்.
01. பாடசாலை நிர்வாகம் மிகவும் மந்தகதியில் செயற்படுவது. ஒரு கட்டுக்கோப்பு அற்ற பாடசாலை நிர்வாகம்.
02. மாணவர்களது கற்றல் நடவடிக்கைகளுக்கு தேவையான பௌதீக வளங்களின் பற்றாக்குறை.
03. க.போ.த. உயர்தர வகுப்பு ஆரம்பிக்கப்படாமை.
04. சரி....உயர்தர வகுப்புக்கள் ஆரம்பிக்க மாணவர்களின் எண்ணிக்கை போதாது என்றால் அம்மாணவர்கள் சம்மாந்துறைக்குச் சென்று உயர்தரம் கற்க பாதுகாப்பான போக்குவரத்து வசதி இல்லாமை.
05. மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் கல்வி தொடர்பான சரியான விழிப்புணர்வு பாடசாலை நிர்வாகத்தாலும், ஊர் பெரியவர்களாலும் வழங்கப்படாமை.
மேற்கூறிய மிக முக்கியமான குறைகளை மஜீட்புர பாடசாலை கொண்டிருக்கின்றது. இந்தக் குறைகளை நிபரத்தி செய்து அக்கிராம மாணவர்களும் கல்வியில் சிறப்புற சம்மாந்துறை கல்வி அபிவிருத்திக் தங்களது காத்திரமான முறச்சிகளை மேற்கொள்வார்களா...???

மக்கள் நண்பன்
சம்மாந்துறை அன்சார்.









 
Top