GuidePedia

த.தே.கூட்டமைப்பினதும் வடக்கு மக்களினதும் நிலைப்பாட்டில் பிரிவினைவாதம் இல்லை என்பது தெரிந்தும் ஜனாதிபதி மஹிந்த, தமிழீழம் தொடர்பில் பேசுவது வெறுக்கத்தக்க விடயமாகும். நிறைவேற்று முறைமையினை தக்க வைக்கவே நாடகமாடுகின்றார் என ஜனநாயக மக்கள் முன்னணியின் ஊடகச் செயலாளர் சி. பாஸ்க்கரா தெரிவித்தார்.
அதிகாரத்தைப் பகிர்ந்து நாட்டை ஐக்கியப்படுத்தும் அமைப்பினால் நேற்று முன்தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஜனாதிபதியின் வடக்கு விஜயத்தின் போது அவர் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் அத்தனை தமிழ் சிங்கள மக்களையும் வெறுப்புக்குள்ளாக்கியுள்ளது.
வட மாகாணத்தின் நிலைமை தெரிந்தம் தமிழ் மக்களின் கொள்கை என்னவென்று தெரிந்தும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தமிழீழம் பற்றி பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது நிலைப்பாடு என்னவென்பது தொடர்பிலும் பிரிவினைவாதத்தினை ஆதரிக்கவில்லை என்பதையும் நீதிமன்றத்தின் மூலமாக தெட்டத்தெளிவாகத் தெரிவித்துவிட்டது.
அப்படியிருந்தும் அரசாங்க தரப்பினரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் பிரிவினையினை மனதில் வைத்துக் கொண்டு தமிழ் மக்கள் விடயத்திலும் இழுத்தடிப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சரி, ஜனநாயக மக்கள் முன்னணியும் சரி, ஒருமித்த கொள்கையிலேயே இருக்கின்றோம். அதாவது, ஒன்றுபட்ட ஐக்கிய இலங்கையின் அதிகாரப் பகிர்வினூடான தீர்வு என்பதே எமது இறுதி முடிவாகும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் கூட பல சந்தர்ப்பங்களில் இதை உறுதிப்படுத்தியுள்ளார்.
நாட்டில் ஜனநாயகம் பற்றிப் பேசுகின்றனர். ஆனால் வடக்கு தமிழ் மக்களின் ஜனநாயகம் பறிக்கப்பட்டுவிட்டது. அண்மையில் வடக்கில் இடம்பெற்ற சாத்வீகப் போராட்டத்தில் பங்கேற்ற ஜெயக்குமாரி கைது செய்யப்பட்டு இன்றுவரை விடுவிக்கப்படாதுள்ளார்.
அவரின் விடுதலைக்காக சாத்வீக போராட்டத்தை முன்னெடுத்த பிரஜைகள் குழுத் தலைவர் கொலை முயற்சியில் இருந்து தப்பித்துள்ளார்.
இத்தாக்குதல் கொலை முயற்சியும் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள வவுனியாவில் நடந்துள்ளது. இன்றுவரை தாக்குதல் நடத்திய எவரும் கைது செய்யப்படவில்லை.
வடக்கு மக்கள் தமது உரிமைகளுக்காக வாய்திறக்க முடியாதுள்ளமையா அரசாங்கம் தெரிவிக்கும் ஜனநாயகம், அஹிம்சைப் போராட்டம் ஒன்று நடத்த முடியாத அளவில் இராணுவத்தினையும் அரசாங்க அடியாட்களையும் பயன்படுத்தி தாக்குதல்களை நடத்துகின்றனர்.
எனவே, தமிழ் மக்களின் விடயத்தில் காட்டுமிராண்டிகளாக நடந்து கொள்ளும் அரசாங்கம் எவ்வாறு தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் தீர்வு பெற்றுத்தரப் போகின்றது என்பதே எமது கேள்வி.
அதேபோல் சர்வதேசத்திற்குக் கூட இலங்கையின் நிலைமை என்னவென்பதும் தெளிவாக விளங்கிவிட்டது. இலங்கையில் பொறுப்புக் கூறல் விடயத்தில் அரசாங்கம் உண்மையாக செயற்படவில்லை என்பதை சர்வதேச மன்னிப்புச்சபை கூட சுட்டிக்காட்டி இருக்கின்றது.
எனவே, ஜனாதிபதி உள்ளிட்ட இந்த அரசாங்கம் தனது கொள்கையில் நிலையாக இல்லையென்பது சர்வதெச விசாரணையில் வெளிநாட்டவர்களின் தலையீடு இடம்பெற அனுமதியோம் என்று முன்கூறிய அரசு சர்வதேச விசாரணையை உலக நாடுகள் முன்னெடுத்தபோது அரசு தனது விசாரணை என வெளிநாட்டவர்களை நியமித்துள்ளது.
இதன் மூலம் தெளிவாக விளங்கிவிட்டது அரசின் நிலையான கொள்கையின்மை. எனவே, ஜனாதிபதி தனது அதிகாரங்களை தக்கவைக்க முயற்சிக்கின்றாரே தவிர ஐக்கிய இலங்கைக்குள் தீர்வினைக் காணவோ, மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவோ முயற்சிக்கவில்லை என்பதே உண்மை என அவர் தெரிவித்தார்.



 
Top