GuidePedia

நேற்றைய தினம் [17.10.2014] நடந்த சதிகளை, எத்தனை பேர் சரியாக உணர்ந்து கொண்டார்களோ தெரியாது. இரண்டு செய்திகள்;


1. மு கா இன்றைய ஜனாதிபதியையே ஆதரிக்கப் போவதாக, தலைவர் றஊப் ஹக்கீம் கூறியதாக, அவர் நாட்டில் இல்லாமல் உம்ராவுக்கு சென்றிருக்கும் போது வந்த செய்தி
2. மு கா வின் மூன்று மாகாண சபை உறுப்பினர்கள், ஐக்கிய தேசிய கட்சிக்கு மாறி, மாகாண ஆட்சியை மாற்றப்போவதாக ஒரு செய்தி



இவை இரண்டில், முதலாவது செய்தி அரசு சார்ந்தது. இரண்டாவது செய்தி ஐக்கிய தேசிய கட்சி சார்ந்தது.



இந்த இரண்டு செய்திகளையும், இன்றைய தமிழ் நாளிதழ்கள் [18.10.2014] முக்கியத்துவம் கொடுத்து பிரசுரித்துள்ளன. அதனையும் எல்லோரும் வாசித்திருப்பீர்கள்.



இதிலிருந்து, அரச தரப்பு; மு கா தனக்கு ஆதரவு தர வேண்டும் என்பதற்கான முயற்சிகளை செய்கின்ற அதே நேரம், ஐக்கிய தேசிய கட்சியும்; மு கா தனக்கே ஆதரவு வழங்க வேண்டும் என்பதற்கான பரப்புரைகளை செய்து கொண்டிருக்கிறது என்பதை நாம் இலகுவாக அறிந்து கொள்ளலாம்.



இவற்றிலுள்ள சுவாரசியமான விடயம் என்னவெனில், முதலாவது செய்தியை வெளியிட்டது ஐக்கிய தேசிய கட்சி ஆதரவு ஊடகம். இரண்டாவது செய்தியை வெளியிட்டது, அரச ஆதரவு ஊடகம். தனக்கு மு கா ஆதரவு வழங்காவிடில், முஸ்லிம்களை மு கா விடமிருந்து பிரிப்பதனூடாக; எரிகின்ற வீட்டில் பிடுங்குவது லாபம் என்ற முதுமொழிக்கேற்ப; கொஞ்சமாவது முஸ்லிம்களின் வாக்குகளை கொள்ளை கொள்வதற்கான முயற்சியையே, இரண்டு கட்சிகளும் முயற்சிக்கின்றன.



மறுபுறம், தமிழ் ஊடகங்கள் இச்செய்திகளின் பின்னணி தெரிந்தும், அவற்றை முக்கியத்துவம் கொடுத்து பிரசுரிப்பதனூடாக, மு கா வை பலவீனப்படுத்தி; தமிழர்கள் எடுக்கப்போகும் நிலைப்பாட்டுக்கே; மு கா வையும் முஸ்லிங்களையும் கொண்டு வர வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு செயற்படுகின்றன.



இவற்றிலிருந்து நாம் ஒரு விடயத்தை மிக எளிதாக விளங்கிக் கொள்ளலாம். அதாவது, பெரும்பான்மை கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சியும் - அரச அணியும் - தமிழர் தரப்புகளும், முஸ்லிம்களையும் மு கா வையும்; தாம் நினைக்கிற திசையில், தாம் விரும்புகின்ற இலக்கை நோக்கி, இழுத்த இழுப்புக்கெல்லாம் கண்ணைப் பொத்திக்கொண்டு வரவேண்டும் என விரும்புவதை அவதானிக்கலாம். அதாவது, தங்களது நிகழ்ச்சி நிரலுக்கே; முஸ்லிங்களும் மு கா வும் இயங்க வேண்டும் என்ற திணிப்பைச் செய்ய முனைவதை புரிந்துகொள்ளலாம்.



இன்னும் கூறப்போனால், தனித்துவ முஸ்லிம் அரசியல் அடையாளத்தை வீசிவிட்டு, பத்தோடு பதினொன்றாக மு கா வும் முஸ்லிங்களும் எங்களோடு சேராது விட்டால் - முஸ்லிம்களை, மு கா வுக்கு எதிராக திருப்பி அழித்து விடுவோம் என்ற ஊடக பயங்கரவாதத்தை நேற்று அரங்கேற்றிக் காட்டினர் என்பதே உண்மையாகும். மறுவழியில் கூறப்போனால், முஸ்லிம்களுக்கு எதிரான முழு அளவிலான மும்முனைத் தாக்குதலை, மூவருமே அரங்கேற்றியுள்ளனர் என்பதை சிந்திக்கக் கூடிய யாவரும் புரிந்து கொள்வர்.



இதனை புரிந்து கொள்ளாத நமது முஸ்லிம்களில் சிலரும், நேற்றைய செய்திகளை தெய்வ வாக்குகளாக எடுத்துக்கொண்டு, மு கா வை விமர்சித்தது, அவர்களின் போதாமையையே வெளிக்காட்டியது. இன்னும் சில பேரினவாத சிந்தனைகளுக்கு அடிமைப்பட்டோருக்கு, சும்மா மென்று கொண்டிருந்த வாய்க்கு அவலும் பழமும் கிடைத்தது போல, மு கா வை திட்டித்தீர்த்தது, அவர்கள் எவ்வளவு தூரம் மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பதை, லாவகமாக காட்டிக் கொடுத்தது.



ஒன்றை எல்லோரும் விளங்கிக்கொள்ள வேண்டும். அதாவது, எதிர்வருகின்ற ஜனாதிபதி தேர்தல் மு கா வுக்கு மட்டும் சவாலாக இருக்கப்போகும் தேர்தல் அல்ல. மாறாக, முழு முஸ்லிம் சமூகத்திற்கும் சவாலான தேர்தல். இந்த தேர்தலை மிகக்கவனமாக நாம் முகங்கொடுக்காது விடின், பாதிக்கப்படப்போவது மு கா மட்டுமல்ல, முழு முஸ்லிம் சமூகமும் தான். எனவே, தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களையும், கட்சிகள் சார் மனநிலைகளையும் ஒதிக்கி வைத்துவிட்டு, நாம் ஒவ்வொருவரும் இந்தத் தேர்தலில் என்ன வகையில் செயற்படுவதனூடாக நமது சமூகத்தை தலை நிமிர்ந்து வாழச்செய்யலாம் என்பதை சிந்தித்து செயலாற்ற முன்வாருங்கள் என்று அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.



நாம் ஆதரிப்பது பச்சையையா, நீலத்தையா என்பதை விடவும், நாம் இந்த மண்ணில் நிம்மதியாக வாழ என்ன நிலைப்பாட்டை எடுக்க முடியும் என்பதன், சாதக பாதகங்களை, கட்சிகளின் நிறங்களுக்கு வெளியேயிருந்து சிந்தித்து கருத்தாடல் செய்யுங்கள் என இந்த சமூகத்தின் பேரால் கேட்டுக்கொள்கிறேன்.






 
Top