கடந்த வாரம் மாதுளுவாவே சோபித தேரரைச் சந்தித்து உரையாடிய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை அவரிடம் கையளித்துள்ளார்.
மாதுளுவாவே சோபித தேரர் மற்றும் முக்கிய மதகுருமார்களின் ஆலோசனையின் பின் குறித்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் சிறியளவிலான மாற்றங்கள் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி மாகாண சபைகளுக்குரிய அதிகாரத்தை வழங்குதல், சுயாதீன ஆணைக்குழுக்களை மீண்டும் உருவாக்குதல், தேர்தல் முறையில் சீர்திருத்தம், வாழ்க்கைச் செலவு குறைப்பு போன்ற விடயங்கள் இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் இடம்பெற்றுள்ளன.
இவற்றுடன் அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு, ஓய்வூதியக் கொடுப்பனவு அதிகரிப்பு போன்ற கவர்ச்சிகரமான திட்டங்களையும் இந்த தேர்தல் விஞ்ஞாபனம் உள்ளடக்கியுள்ளது.
இதற்கிடையே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதுவரை தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை இறுதி செய்ய முடியாத நெருக்கடி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
மஹிந்த சிந்தனை - அபிவிருத்தி யுகம் என்ற தலைப்பில் அவர் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை தயாரித்துக் கொண்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
எனினும் சிறுபான்மை மக்கள் தொடர்பான தெளிவான வாக்குறுதிகள் எவையும் இதுவரை உள்ளடக்கப்படாத நிலையில், தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படும், முஸ்லிம்களின் அபிலாசைகள் பூர்த்தி செய்யப்படும் என்றவாறான பொதுவான வாசகங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இடம்பெற்றுள்ளன.
அத்துடன் பௌத்த மதகுருமாருக்கு முன்னுரிமை அளிப்பது குறித்தும், அவர்களின் ஆலோசனையின் பேரிலேயே அரசாங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்பது தொடர்பிலும் ஒரு முக்கிய கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் தமிழ், முஸ்லிம் மக்களின் உரிமைகள் தொடர்பில் பௌத்த மதகுருமாரின் விருப்பமின்றி எதனையும் செய்யமாட்டோம் என்பதை சிங்கள மக்களுக்கு மறைமுகமாக உணர்த்த முடியும் என்று ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை தயாரிக்கும் குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.