GuidePedia

இலங்கைக்கு எதிராக அடிப்படைவாத முஸ்லிம் பயங்கரவாதம் தலைதூக்கியுள்ள நிலையில் விடுதலைப் புலிகள் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீக்கியமையானது நாட்டுக்குள் பயங்கரமான சூழ்நிலை உருவாகும். எனவே, அரசாங்கம் படையினரையும் உளவுப் பிரிவினரையும் உஷார்படுத்த வேண்டுமென வலியுறுத்தும் பொது பல சேனா இந்நிலை ஏற்பட ராயப்பு ஜோசப்பே காரணமாகும். எனவே, அவரை கைது செய்ய வேண்டுமென்றும் தெரிவித்தது.

கொழும்பில் கிருலப்பனையிலுள்ள பொதுபல சேனா அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. இங்கு உரையாற்றிய பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர்;

அல் கைதா முஸ்லிம் பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய இலங்கையர் மலேசியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளார்.

மறுபுறம் பாகிஸ்தான் ஊடாக முஸ்லிம் பயங்கரவாதிகள் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் ஊடுருவும் வாய்ப்புக்கள் உள்ளதாக இந்திய உளவுப் பிரிவினர் தகவல் வழங்கியுள்ளனர்.

அத்தோடு எமது நாட்டுக்கு எதிராக முஸ்லிம் அடிப்படைவாத பயங்கரவாதம் நாளுக்கு நாள் தலை தூக்கி வருகின்றது.

விடுதலைப் புலிகளுக்கும் முஸ்லிம் பயங்கரவாதிகளுக்கும் தொடர்பு உள்ளது. இவ்வாறானதொரு நிலையில் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் 8 வருடங்களுக்கு பின்னர் தடையை நீக்கியுள்ளது.

இது புலிகள் மீண்டும் எழுச்சி பெறவும் ஆயுதங்கள் நிதி சேகரிப்பதற்கும் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கும்.

ஆயுத ரீதியாக புலிகள் அழிக்கப்பட்டாலும் அரசியல் ரீதியாக சர்வதேச ரீதியாக புலம்பெயர் புலி ஆதரவாளர்களின் நடவடிக்கைகளை தோல்வியடையச் செய்ய அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்கவில்லை.

வெளிநாடுகளிலுள்ள எமது தூதுவர்களும் சிறப்புரிமைகளை அனுபவிக்கின்றனரே தவிர இவ்வாறான செயற்பாடுகளை தடுக்க முனைவதில்லை.

வெளிவிவகார அமைச்சு தனது கடமைகளை செய்வதில்லை. இவையனைத்தும் புலிகளின் தடையை நீக்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு சாதகமாக அமைந்தது. எனவே அரசாங்கம் இனியும் அசமந்தப் போக்கை கைவிட்டு வெளிநாட்டுத் தூதுவர்களை இயக்க வேண்டும். வெளிவிவகார அமைச்சை செயற்பட வைக்க வேண்டும்.

ஏனென்றால் நாடு மீண்டும் இன்று பயங்கரவாத அச்சுறுத்தலுக்கும் ஆபத்துக்கும் உள்ளாகியுள்ளது. எனவே முப்படையினரையும் உளவுப் பிரிவினரையும் உஷார் நிலையில் வைக்க வேண்டும்.

ராயப்பு ஜோசப் தலைமையில் சில ஆயர்கள் ஐ.நா. வுக்கும் வெளிநாடுகளுக்கும் இங்கு இராணுவம் தமிழர்களை கொலை செய்ததாக கடிதம் எழுதினார்கள். புலிகளின் தடை நீக்க துணை போனவர் ராயப்பு ஜோசப். ஆனால், அரசாங்கம் அவருக்கு பயந்து போயுள்ளது, அது தான் ஏன் என்று தெரியவில்லை.

சர்வதேசத்திற்கு எதிராக விரலை நீட்டுவதற்கு முன்பதாக உள்ளூரில் உள்ள விஷப்பாம்புகளை அடையாளம் காண வேண்டும். நாட்டுக்கு எதிராக செயற்படும் ராயப்பு ஜோசப்பை உடனடியாக கைது செய்ய வேண்டும்.

நாங்கள் கத்தோலிக்கர்களுக்கு எதிரானவர்கள் அல்ல. யுத்த காலத்தில் நாட்டுக்கு பல கத்தோலிக்க இளைஞர்கள் படையில் இணைந்து உயிர் தியாகம் செய்தனர். ஆனால், ராயப்பு ஜோசப் போன்ற சிறு குழுக்கள்தான் நாட்டுக்கு எதிராக செயல்படுகின்றன என்றும் ஞானசார தேரர் தெரிவித்தார்.



 
Top