GuidePedia

மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் இலங்கை பொலிஸ் ஆட்சியாக இருந்தது. இந்தநிலையில் மஹிந்த நாடாளுமன்ற தேர்தலின் ஊடாக மீண்டும் ஆட்சிக்கு வந்திருந்தால், நாட்டில் அப்பாவிகள் பலர் கொலை செய்யப்பட்டிருப்பார்கள் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தெரிவித்துள்ளார்

தெரிவு செய்யப்பட்ட செய்தியாளர்களுடன் இந்தியாவில் வைத்து கருத்துக்களை பகிர்ந்து கொண்ட சந்திரிக்கா, தம்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களில் இருந்து மீளவே, மஹிந்த மீண்டும் தேர்தலில் போட்டியிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

அவரின் ஆட்சியின் போது சிங்களவர்களும் தமிழர்களும் கருத்துக்களை வெளியிட தயங்கியதாக சந்திரிக்கா தெரிவித்துள்ளார்.

பிராந்தியத்தில் இந்தியாவின் அபிலாசைக்கு அப்பால் சென்று செயற்பட முடியாது என்று குறிப்பிட்ட அவர், மஹிந்த ராஜபக்ச இந்தியாவை திருப்திப்படுத்திக் கொண்டு ஏனைய அதிகாரமுள்ள நாடுகளின் அதிகாரங்களை இலங்கைக்குள் மேம்படுத்தியதாக சந்திரிக்கா குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்தியாவை பொறுத்தவரையில், அதன் உதவி இலங்கையின் முதலீடுகளுக்கு தேவைப்படுகிறது.  தென்னாசியாவிலும் சர்வதேசத்திலும் இந்தியாவின் ஆற்றலை குறைத்து மதிப்பிட முடியாது.

இதேவேளை இலங்கையில் சீனாவின் பல்வேறு பாரிய முதலீடுகளுக்காக ராஜபக்ச நிர்வாகத்துக்கு பாரிய தொகை தரகுப்பணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் சந்திரிக்கா சுட்டிக்காட்டியுள்ளார்.

மஹிந்த ராஜபக்சவை கடந்த ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைய செய்வதில் இந்தியாவின் பங்கு இருந்தது என்ற கருத்தை மறுத்த சந்திரிக்கா, இலங்கை மக்களே தமக்கு தேவையான ஜனநாயகத்தை ஏற்படுத்தினர் என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழர்களுடன் நல்லிணக்க முயற்சிகள் தொடர்பில் கருத்துரைத்த அவர், தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவின் தலைமையை தாம் வகிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், தமது ஆணைக்குழு பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வை பெற்றுக்கொடுக்க பொன்னான வாய்ப்பை பெற்றுள்ளது. அத்துடன், தமிழர்களின் காணிகள் மீண்டும் கையளிக்கப்பட்டு வருகின்றன.

காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினைகளும் அதிகாரப் பகிர்வு தொடர்பிலும் உரிய தீர்வுகள் எட்டப்படும் என்றும் சந்திரிக்கா தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பில் இரண்டு தரப்புக்களும் உடனடியான தீர்வுகளை காண வேண்டும் என்றும் சந்திரிக்கா வலியுறுத்தியுள்ளார்.



 
Top