நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜே.வி.பி. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் வலியுறுத்தியுள்ளது.
அரசியலமைப்புச் சபைக்கு உறுப்பினர்களை நியமித்து, சுதந்திர ஆணைக்குழுக்களை உடனடியாக செயற்படுத்துவதை துரிதப்படுத்தும் நோக்கிலேயே ஜே.வி.பி. இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளதாக அக்கட்சியின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தற்போதைய நிலையில் எதிர்வரும் 22ம் திகதி வரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் அரசியலமைப்புச் சபைக்கு உறுப்பினர்களை நியமிப்பதும் தாமதிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்புச்சபை செயற்படத் தொடங்கியதன் பின்னரே சுயாதீன ஆணைக்குழுக்களை உருவாக்க முடியும்.
இதனைக் கருத்திற்கொண்டே நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஜே.வி.பி. கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள ஜே.வி.பி. தலைவர் அனுர குமார திசாநாயக்க, தேவையற்ற தாமதமங்களைத் தவிர்த்து, அரசியலமைப்புச் சபை மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்களின் செயற்பாட்டை துரிதப்படுத்த நாடாளுமன்றம் உடனடியாக கூட்டப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
